வடிவேல் என்ற தமிழ்ச்சொல் அழகானது. வினைத்தொகை! வடிக்கப்பட்ட வேல், வடிக்கப்படும் வேல், வடிக்கப் படப்போகும் வேல்.
ஒருவித dynamic ஆயுதம், வளரும் ஆயுதம்! தன்னைத் தானே செதுக்கிக் கொள்ளும், கூர்ப்படுத்திக் கொள்ளும் உயிர்ப்புள்ள ஆயுதம். ஏதோ ஒரு யுகத்தில் பார்வதியால் தன் பிள்ளைக்காக வடிவமைத்துக் கொடுக்கப்பட்டு, சூர பத்மாவைத் துளைத்துச் சென்று கொன்று போட்டதுடன் அதன் வேலை முடிந்து விடவில்லை என்று தோன்றுகிறது. வடி-வேல், growing, evolving!
கதாயுதம் துர்க்கையிடமும் இருக்கும். அனுமனிடமும் இருக்கும். சூலாயுதம் சிவனிடமும் இருக்கும், பார்வதியிடமும் இருக்கும். பாசம் விநாயகரிடம் இருக்கிறது. யமனிடமும் இருக்கிறது. ஆனால் வேல்? முருகனுக்கே உரியது. பிரத்யேகமானது. மற்ற தெய்வத்துக்குப் பொருத்திப் பாருங்கள். odd ஆக இருக்கும். வேல் மட்டுமே destructive weapon ஆக மட்டும் இல்லாமல் constructive weapon ஆக இருக்கிறது. ஞான வேல்! ஞான திரிசூலம், ஞான வாள், ஞான வில் என்றெல்லாம் சொல்வதில்லை. ஆயுதத்தை அறிவாக மாற்றும் ரசவாதம்! ஆயுதத்தை positive ஆக ஞானத்துடன் ஒப்பிடுவது இங்கு தான். அறியாமை அழிந்தாலே எஞ்சி இருப்பது ஞானம் தானே? வேலுக்கு வடமொழியில் 'சக்தி' என்றே பெயர். ஆற்றல் வடிவற்றது. கட்புலனாகாதது. ஒருவேளை ஆற்றலுக்கு ஒரு வடிவம் கொடுக்க முடிந்தால் அது வேல் வடிவிலேயே இருக்கும் என்று தோன்றுகிறது.
வேலின் வலிமை எறிபவன் கையில் இருக்கிறது. அதன் வேகத்தில் இருக்கிறது. வெற்பு நொறுங்கிப் பொடிப்பொடி ஆக்கும் வடிவேல்! அறிவின் கூர்மை, அறிவின் வேகத்தில் இருக்கிறது. அறிவு, ஞானம் static ஆக இருந்து பயனில்லை. applied knowledge. எறிபவன் வேண்டும்! அறிவு பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொரு வேலும் அதற்குரிய முருகனைத் தேட வேண்டும்! கிரௌஞ்ச மலையை முருகனது வேல் பிளந்து பொடியாக்கியதால் ஒவ்வொரு மலையும் வேலிடம் பயப்படுகிறதாம். (நிபிடமுடி நெடியகிரி எந்தமைக்கா எனவும் நிகழ்கின்ற துங்க நெடு வேல்!) ஆனாலும் மலை தோறும் முருகன் வீற்றிருப்பது அழகிய முரண்!
கதாயுதத்தைத் சதா தூக்கிச் சுமக்க முடியாது. கனம்! வில்லுக்கு அம்பு வேண்டி இருக்கிறது. அம்பு இல்லையேல் வில் வீண்! வாளுக்கு உறை வேண்டி இருக்கிறது. இல்லையேல் கையைக் கிழித்து விடும். கேடயம் என்ற துணைக்கருவி தேவைப்படுகிறது. திரிசூலம் கூட மூன்று இடங்களில் குத்துகிறது. சிக்கிக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இரண்டு சூலாயுதங்கள் சண்டையிட்டால் அடிக்கடி சிக்கிக்கொண்டு விடும்! ஆனால் வேல் ஒரு perfect ஆயுதம். handy! peak கில் மட்டும் கூர்மை. கையில் பிடித்துக் கொள்ளலாம். சுலபமாக எறியலாம்!
முருகனுக்கு இரும்புப் பட்டறையில் 24 x 7 வேல் வடிக்கும் வேலை தானா என்று நாத்திகர்கள் சிலர் கேலி செய்யலாம். ஆனால் அந்தத் தொழிலில் ஒன்றும் தவறு இல்லையே? சேனாதிபதி ஒருவனுக்குப் பட்டறையில் வேலை இருப்பது பெரிய விஷயம் இல்லையே? ஆயுதங்கள் பளபளப்பாக showcase சில் அடுக்கி வைத்திருந்தால் அது வீரனுக்கு அழகல்லவே? மேலும் demand இருக்கும் வரை production னும் இருக்கும் தானே? கெட்டவை முளைத்துக்கொண்டே இருக்கின்றன. அவற்றைக் குத்திக் கிழிக்க வேல்கள் வடிக்கப்பட்டு வந்து கொண்டே இருக்கின்றன.மேலும், வேல் வடிக்கும் formula வை பணியாளர்களுக்குச் சொல்லிக் கொடுத்து விட்டு முருகன் கல்லாவில் வந்து அமரக் கூடாதா என்ன? சொல்லப்போனால் உலகின் மிகப்பெரிய இரும்புக்கடை முதலாளி முருகன் தான். முருகனின் 'செட்டி' என்ற பெயரைக் கவனிக்கவும். ஏரகத்துச் செட்டியார்! மிகப்பெரிய வணிகர். missile supplier!
சஷ்டி கவசத்தில் இந்த வரிகள் மனம் கவர்ந்தவை:
வீசியதை அள்ளலாம்; பேசியதை அள்ள முடியாது என்று சொல்வார்கள். பேசிய வார்த்தைகள் பேசியவை தான். அவற்றின் consequence-சில் இருந்து நாம் தப்பவே முடியாது. வாய் இருக்கிறது என்று பேசி விட்டு எத்தனை பேர் அதன் legal consequence ஐ அனுபவித்து கொண்டு இருக்கிறார்கள்? ஆனால், முருகனின் பெருவேல் அதிலிருந்தும் நம்மைக் காக்கிறதாம். குற்றம் இறந்தகாலத்தில் past-டில் நிகழ்ந்து இருந்தாலும் நம்மைக் காக்கிறதாம். 'பேசிய வாய்தனைப் பெருவேல் காக்க'. பேசும் வாய் இல்லை. பேசிய வாய்! போய பிழையும் புகுதருவான்!!
"அடியேன் வசனம் அசைவுள நேரம்கடுகவே வந்து கனகவேல் காக்க"
- இதற்காகவே நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் வேல் உற்பத்தி வேண்டுமே ஐயா! மனிதர்கள் சதா வசனித்துக் கொண்டே இருக்கிறார்களே. 'என்னுடைய வசனங்கள் கொஞ்சம் அப்படி இப்படி அசைந்தாலும் உடனே வந்து கனகவேல் காக்க வேண்டும்' என்று வேண்டிக் கொள்கிறார் இந்த அடியவர். இந்தப்பக்கம், அந்தப்பக்கம் சாயாத நடுநிலை நியாய வசனம்! மனிதர்களுடன் ஓர் இரண்டு நிமிடம் பேசினாலே அவர்கள் சார்பு வெளிப்பட்டு விடுகிறதே, சாயம் வெளுத்து விடுகிறதே, தொண்டை வழியே மண்டையில் இருக்கும் கொண்டை வெளிப்பட்டு விடுகிறதே, நடுவு நிலைமையில், கோர்ட் தராசு போல எத்தனை பேரால் அசைவின்றிச் சாயாமல் சிதறாமல் சரியாமல் சறுக்காமல் பேசிவிட முடியும்?
தராசு செய்பவன் கதை ஒன்று வருகிறது. ஒரு ஆள், இப்படித்தான் பட்டறையில் தினமும் நூற்றுக் கணக்கில் தராசு செய்து சந்தையில் விற்பவன். ஒரு கட்டத்தில் வாழ்க்கை சலித்து விடுகிறது. ஞானத்துக்கான தேடல் வந்து விடுகிறது. தொழிலைத் துறந்து விட்டு, மனைவி மக்களை விட்டுத் தொலைதூரம் காடுமலை கடந்து சென்று ஞான குரு ஒருவரைச் சந்திக்கிறான். அவர் சிரித்து விட்டு, 'அட, நீ செய்யும் வேலையைத் தான் நானும் செய்கிறேன் அப்பா, என்னைத் தேடியா வந்தாய்? நானும் தராசு செய்பவன் தான், இந்தப் பக்கம் அந்தப்பக்கம் அசையாத அந்தத் தராசின் முள் தான் ஞானம், போ, திரும்பிப் போ, தராசைக் கவனி, அதே நேரம் உன் மனதையும் கவனி, எந்தப் பக்கம் முள் சாய்கிறது என்று கவனி, சாய்ந்தால் ஏற்றி நிறுத்து, அதுதான் ஞானம் " என்று உபதேசித்துத் திருப்பி அனுப்புகிறார்.
சூரபத்மனை அழித்தது கூட வேலுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
மயில் என்பது வேலின் by-product மற்றொரு வடிவம் தான். மரத்தைப் பிளந்ததும் ஒரு பாதி மயிலாகிறது. ஒரு பாதி கொடியாகிறது. ஒன்று முருகனைச் சுமக்கிறது. ஒன்றை முருகன் சுமக்கிறான். again, அத்தனை பெரிய ஆகிருதியை அத்தனை சிறிய feathery பறவை எப்படிச் சுமக்கும் என்ற நாத்திக வாதம் உள்ளே வருகிறது. மாமரம் பறக்க ஆசைப்படுகிறது. பரிணாமத்தில் முன்னேற விரும்புகிறது. மரத்தால் நகரக் கூட முடியாது, பறப்பது எப்படி? முருகனின் வேலால் அதற்கு விமோசனம் வருகிறது. சிறகுகள் வருகின்றன. நன்றி மறவாமல், சிறகு தந்தவனைத் தூக்கிச் சுமக்கிறது மர மயில். நமக்குச் சிறகு தந்தவர்களை, பறக்க வைத்தவர்களை, தூக்கி விட்டவர்களைக் காலமெல்லாம் நாம் தூக்கிச் சுமக்க வேண்டும் என்ற நன்றி மறவாமை மயிலின் தத்துவம்!
சூரன் தன்னை ஒரு மாமரமாக disguise செய்து கொள்கிறான். ஒரே ஒரு மாறுவேடம் தான். வேல் அவனைச் சுலபமாகப் பிளந்து செல்கிறது. ஆனால் இன்றைய உலகின் அரக்கர்கள் எத்தனையோ மாறுவேடங்களைப் புனைந்து கொண்டு விடுகிறார்கள். மண்ணாக, மரமாக, மலையாக, மனிதனாக, மகானாக! சிலநேரம் பக்தர்களாகவும் வேடம் போடுகிறார்கள். வேலே சிலநேரம் குழம்பிப்போய் விடும்படி. மரமாக நின்றால் பிளக்கலாம். மரவுரி தரித்து மகா தபஸ்வியாக வேடமிட்டால்? மயிலும் மயங்குமே! இப்படி ஒவ்வொரு மாறு வேடத்துக்கும் ஒவ்வொரு வேல் தேவைப்படுகிறது. factory யில் assembly line களில் அதன் உற்பத்தி நிற்பதே இல்லை. 24 x 7 non stop production!
சில நேரங்களில் ஞான விநியோகம், பல நேரங்களில் சூர சம்ஹாரம்!