Tuesday, 8 September 2020

காசி க்ஷேத்திரம் மகிமை

காசி க்ஷேத்திரத்தில் பார்வை படும் இடமெல்லாம் லிங்க ஸ்வரூபம் காணப்படும். தரையில் பல இடங்களில்ந லிங்க ஸ்வரூபம் இருப்பதால் ராமகிருஷ்ண பரமஹம்சர் காசி நகரத்தில் மலஜலம் கூட கழிக்காது நகருக்கு வெளியே செல்வார் என்றும், காஞ்சி மஹா பெரியவர் காசியில் வசிக்கும் காலங்களில் காலில் பாதுகையே அணியமாட்டார் என்றும் கூறுவர். காசியில் செயலேதும் புரியாமல் சும்மா படுத்திருந்தாலும் உயர்ந்த யோகம் செய்வதற்கும் மேலாகும் என்பது பொதுவான கருத்து.

காசி விஸ்வநாதரின் தேவி விசாலாட்சி அம்மனாகும் . 1893 -ஆம் ஆண்டு தேவிக்குத் தனிக்கோயில் நகரத்தார்களால் அமைக்கப்பெற்று இங்கும் 3 வேளை பூஜைக்கு நகரச் சத்திரத்தில் இருந்து "சம்போ' உடன் பொருள்கள் அனுப்பப்படுகின்றன. தீபாவளியின்போது மட்டும் இரண்டு நாள்களுக்கு நாட்டுக்கோட்டை நகரச் சத்திரத்தில் உள்ள ஸ்வர்ண உற்சவ விசாலாட்சி அம்மன் தரிசனத்திற்கு மண்டபத்தில் எழுந்தருளுகின்றார்.



காசி என்றவுடன் விஸ்வேஸ்வரருடன் நினைவில் வர வல்லவள் தேவி அன்ன பூரணேஸ்வரி. தனிக்கோயில் கொண்டிருக்கும் அன்னைதான் புவனங்கள் பதினாங்கினுக்கும் அன்னம் பாலிப்பவள். விஸ்வரூபம் கொண்ட லிங்கோத்பவரின் முடியைப் பார்த்து விட்டதாக அன்னப் பறவை வடிவம் கொண்ட பிரம்மா பொய் கூற, கோபம் கொண்ட சிவன் பிரம்மனின் ஒரு தலையைக் கொய்து விட்டதாகவும் அந்தத் தலையானது சிவன் கைகளை விட்டு அகலவில்லை என்றும், அந்தக் கபாலத் திருவோடு கொண்டு வீதி வீதியாக அவர் அலைந்ததாகவும், திருவோடுதனில் காசியில் அன்னபூரணேஸ்வரி பிக்ஷை இட்டவுடன் அது சிவன் கைகளிலிருந்து மறைந்தது என்றும் கூறுகிறது புராணம்.

இன்றும் நாள்தோறும் அதிகாலையில் அன்னபூரணி அம்மனின் கோயில் நடைக்கதவு முதலில் திறக்கப் பெற்றதும் அபிஷேக அலங்காரங்கள் நடைபெறுகிறன்றன. பின்னர்தான் விஸ்வேஸ்வரருக்கு அபிஷேக அலங்காரம் நடைபெறுகிறது. அன்னையிடம் வந்து அவர் பிக்ஷை பெற்றுக் கொண்டு செல்வதே இன்றும் வழக்கமாக உள்ளது.

அன்னபூரணிக்குத் தினமும் குபேரன் பூஜை செய்து வருவதாகவும், அதனால் பூட்டிய கர்ப்பகிரகத்தினுள் இருப்பதாகவும் கூறுவர். ஆண்டுதோறும் தீபாவளி சமயம் மட்டும் மூன்று நாள்களுக்கு தங்க அன்னபூரணி பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றாள். தீபாவளியின்போது விஸ்வேஸ்வரர் கோயிலில் மிட்டாய்த் தேரும் அன்னபூரணி கோயில் அன்னக்கூட்டும் விசேஷமான நிகழ்வுகள் ஆகும்.

தலம்: கால பைரவர் திருக்கோயில் காசியில் பிரசித்தம். காசி நகரமே கால பைரவரின் காவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், இங்கு வருபவர்கள் அவரது உத்தரவுக்குப் பிறகே நகரை விட்டு வெளியேறலாம் என்றும் கூறுவதுண்டு. கால பைரவர் சந்நிதியில் வழங்கப் பெறும் கருப்புக் கயிறு மகிமை வாய்ந்தது.

காசி பிரசாதம் என்றாலே விஸ்வேஸ்வர் கோயில் விபூதி, விசாலாட்சியின் செந்தூரக் குங்குமம் மற்றும் பைரவரின் கருப்புக் கயிறு ஆகும்.

காசி க்ஷேத்திரத்தில் பருந்து வட்டமிடாது, பல்லி திருவுளம் ஒலிக்காது; மாடு முட்டாது; வில்வம் மிதக்கும் என்று கேள்விப்பட்டேன். இதற்குக் காரணமாக புராணம் ஒன்றுண்டு. ராமபிரான் இலங்கை வேந்தனுடன் போர் புரிந்து வெற்றி கண்டு ராமேஸ்வரம் வந்தவுடன் தனக்கேற்பட்ட தோஷத்தைப் போக்கிக் கொள்ள வேண்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்ய எண்ணி அனுமனை, சிவலிங்கத்தைக் கொண்டு வர காசிக்கு அனுப்புகின்றார்.

அனுமன் காசிக்குச் சென்று அங்கே கருடன் வட்டமிட்டுப் பறந்ததும் திருவுளம் சொல்லியதுமான இடத்தில் இருந்த சுயம்பு லிங்கத்தை எடுத்துக் கொண்டு ராமேஸ்வரம் திரும்பினார். காசியும் அதன் சுற்றுப்புறமும் பைரவர் காவலுக்கு உரிய பிரதேசமானபடியால் பைரவர் இசைவு இன்றி லிங்கத்தை எடுத்தபடியால் அனுமனுக்கும் பைரவருக்கும் போர் மூண்டது. அப்பொழுது அனுமன் கருடன் வட்டமிட்டதையும், பல்லி திருவளம் சொல்லியதையும் கூறினார். அது கேட்ட பைரவர் அன்று முதல் கருடனும், பல்லியும் காசியில் முறையே பறக்கவும், திருவுளம் சொல்லவும் கூடாது என்று சாபமிட்டதாகவும் உள்ளது வரலாறு.

இப்புனித க்ஷேத்திரத்தில் அறிவு ஒளி பெற்ற ஆன்றோர் ஆதி சங்கர பகவத்பாதாள், புத்தர் போன்ற மகான்கள். கபீர்தாஸ், பாரதியார் போன்ற கவிஞர்கள் இங்கு வாழ்ந்தனர். உஸ்தாத் பிஸ்மில்லா கான், பண்டிட் ரவிசங்கர் போன்ற உலகப் பிரசித்தி பெற்ற கலைஞர்களும் காசிவாசிகள். பண்டிட் மதன்மோகன் மாளவியா இங்கு நிறுவிய வாரணாசி ஹிந்து பல்கலைக்கழகம் புகழ் வாய்ந்தது. காசி நகரின் அருகாமையில் அமைந்துள்ள சாரநாத்தில்தான் புத்தர் போதி மரத்தின் கீழ் ஞான ஒளி பெற்றார். இந்திய நாட்டின் அடையாளச் சின்னமான அசோகர் தூணும் இங்குதான் உள்ளது. புத்தகயா, அலகாபாத் திரிவேணி சங்கமம் ஆகியவை காசிக்கு மிக அருகில் உள்ள விசேஷமான
தலங்களாகும்.

No comments:

Post a Comment