Friday, 8 May 2020

கர்ம பலன்

எல்லா முயற்சிகளுக்கும் அவற்றிற்குரிய கர்ம பலன் கண்டிப்பாக உண்டு.
அந்த கர்ம பலன், நாம் நினைக்கும் விதத்திலோ, நாம் எதிர்பார்க்கும் விதத்திலோ, நாம் ஆசைப்படும் விதத்திலோ (அது எவ்வளவு நியாயமாக, தர்மமாக இருந்தாலும் சரி) நடக்கவேண்டும் என்பது இல்லை என்பது தான் விஷயம்! அந்தப் பலன் இறைவனின் இச்சைப் படியே வந்து சேர்கிறது என்பது தான் விஷயம்.
ஆக, பலனைப் பற்றிய முன் ஆராய்ச்சிகளை, எதிர்பார்ப்புகளையெல்லாம் விட்டுவிட்டு உன் கர்மத்தைச் செய் என்பது தான் கர்ம யோகம் காட்டும் வழி. இதில் பக்தியையும் கலந்தால், "எல்லாவற்றையும் இறைவனுக்கு அர்ப்பணமாகச் செய்" அல்லது "அவரது ஒரு கருவியாகச் செய்", "பலனை அவர் திருவடியில் ஒப்புவித்துவிடு" என்றெல்லாம் சேர்த்து சொல்லலாம்.
ஐயா, ஏதாவது ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் என்னால் கர்மம் செய்ய முடியவில்லையே என்கிறீர்களா?
அப்படியானால், உங்கள் எதிர்பார்ப்பை வைத்துக்கொண்டே கர்மம் செய்யுங்கள். தவறில்லை. ஆனால் 'எனக்கு எது நல்லது, எது கெட்டது என்பது என்னை விட என் இறைவனுக்கு நன்றாகத் தெரியும்' என்கிற அடிப்படை நம்பிக்கையும் உங்களுக்கு வேண்டும். அது கூட இல்லை என்றால், இறைவன் என்னும் மேலான சக்தியை நீங்கள் நம்பவேண்டியதே இல்லையே! அதனால்,

எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால் அது தான் இறைவன் இச்சை என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

எதிர்பார்ப்புக்கு முற்றிலும் மாறாய் பலன் வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

பாதி சாதகம், பாதி பாதகம் என்று வந்தால் அது இறைவன் இச்சை என்று ஏற்றுக்கொள்ளுங்கள்.

முற்றிலும் உங்களுக்கு சாதகமாக வந்தால் அது இறைவன் இச்சையால் தான் நடந்தது ( என் சாமர்த்தியத்தால் இல்லை) என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

இறைவனே எல்லாம் தருகிறார் என்றால் நான் ஏன் முயலவேண்டும் என்கிறீர்களா?
அந்த நம்பிக்கை 100 சதவீதம் ஒரு ஆளுக்கு வந்துவிட்டால் அவனுக்கு செய்யவேண்டிய கர்மம் ஒன்றும் இல்லை. அவன் கர்மத் துறவி. அவன் 'நான் கர்த்தா' என்கிற உணர்வைப் பூரணமாகத் துறந்தவன். அப்படியே அவன் கர்மம்/ முயற்சி ஏதும் செய்வதாக அடுத்தவர்க்குத் தோன்றினாலும் அவனுக்குத் தெரியும் தான் செய்யவில்லை. எல்லாம் தானே நடக்கிறது என்று.
அவ்வளவு தான் 

No comments:

Post a Comment