Tuesday, 10 December 2019

தக்காளி ஊறுகாய்

தேவையானவை : 
தக்காளி – ஒரு கிலோ, காய்ந்த மிளகாய் – 150 கிராம், வெந்தயம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கல் உப்பு – தேவையான அளவு.
தாளிக்க : கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை : தக்காளியை நன்றாகக் கழுவி, துடைத்து… நான்காக நறுக்கிக் கொள்ளவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு கலந்து, ஒருநாள் மூடி வைக்கவும். அடுத்த நாள், அதனை வெயிலில் வைத்து எடுக்கவும்.
அடுத்தடுத்த நாட்களில், நறுக்கிய தக்காளியை ‘பிளாஸ்டிக்’ பேப்பர் மேலே பரப்பிக் காய வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரையும் வெயிலில் வைக்கவும். தக்காளியில் உள்ள தண்ணீர் உலர்ந்ததும், பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை தக்காளியின் மேல் தெளித்துக் காய விடவும். பாத்திரத்தில் இருக்கும் மொத்த தண்ணீரும் தீரும் வரை இதேபோல் செய்து, தக்காளியை நன்கு உலர்த்தி, காயவைத்து எடுக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாயைப் போட்டு வறுத்துக் கொள்ளவும். கடுகையும் வெந்தயத்தையும் தனித்தனியாக வறுத்துப் பொடிக்கவும். காய வைத்த தக்காளியுடன் வறுத்த மிளகாய் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதை அதில் சேர்த்து… மஞ்சள்தூள், பொடித்த கடுகு, வெந்தயத்தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறி ஆறவைக்கவும். பிறகு, ஈரமில்லாத பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும்.
இந்த ஊறுகாய் 3 மாதம் வரையிலும் கெடாது.

No comments:

Post a Comment